Thursday 29 March 2012

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் நாடுகள் எனப்படுகின்றன. இந்த நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பே காமன்வெல்த் அமைப்பாகும். காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைமையகம் லண்டனில் உள்ளது.
 காமன்வெல்த் கூட்டமைப்பில் இப்போது 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எனினும் உள்நாட்டு கலவரம் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஃபிஜி மட்டும் கூட்டமைப்பில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகளே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகும். காமன்வெல்த் போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான முதல் விதையை விதைத்தவர் ஆஸ்ட்லே கூப்பர் எனும் கிறிஸ்தவ பாதிரியார்
1911-ம் ஆண்டு மன்னர் ஜார்ஜ் பதவியேற்ற போது அதைக் கொண்டாடும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனிகளான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகள் பங்கேற்றன
ராபின்சன் என்பவரின்  தீவிர முயற்சியின் காரணமாக முதலாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு நடைபெற்றது.
  முதலாவது போட்டி "பிரிட்டிஷ் எம்பையர் கேம்ஸ்' (பிரிட்டிஷ் சாம்ராஜ்ய விளையாட்டுப் போட்டிகள்) என்ற பெயரில் கனடாவின் ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் 11 நாடுகளைச் சேர்ந்த 400 வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் 6 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்று இருந்தன. அதன் பிறகு பல விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறையும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்ட நாடுகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறத் தொடங்கின.
 1942-ம் ஆண்டு கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2-வது உலகப் போரின் காரணமாக கைவிடப்பட்டது. உலகப் போர் 1945-ம் ஆண்டு முடிந்த நிலையில் நிர்வாகக் காரணங்களால் 1946-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய போட்டியும் நடத்தப்படவில்லை.
 அதன்பிறகு 1950-ம் ஆண்டு முதல் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பல நாடுகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றன. இதன்பின் காமன்வெல்த் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு இப்போட்டி "பிரிட்டிஷ் எம்பையர் காமன்வெல்த் விளையாட்டுகள்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1970-ம் ஆண்டு "பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1978-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரால் இது வழங்கப்பட்டு வருகிறது.
 இதுவரை 7 நாடுகளில் 18 நகரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்போட்டிகளை நிர்வகிக்க, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போட்டிக்கான விதிமுறைகள், போட்டியில் இடம்பெறும் விளையாட்டுகள், போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் இந்த சம்மேளனம் கவனித்து வருகிறது.
 காமன்வெல்த் நாடுகள் மொத்தம் 54. ஆனால் வழக்கமாக காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும் அணிகள் மொத்தம் 71. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உள்பட்ட ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகள் தனி அணியை அனுப்புகின்றன. இதேபோல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உள்பட்ட பல சிறிய பிரதேசங்களும் தனி அணியை அனுப்புவதால் 71 அணிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுகளாக இப்போது 35 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டடுள்ளன. எனினும் இவை அனைத்தும் போட்டிகளில் இடம்பெறுவதில்லை.
 தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர்  3-ம் தேதி கோலாகலமாக துவங்கினஅக்டோபர் 4-ம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்றன. 11 நாள்கள் நடைபெற்ற போட்டி வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது
  டில்லியில் நடைபெற்றது  19வது காமன்வெல்த் போட்டி
தில்லி போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
 தில்லியில் நடைபெற்ற 2010 ஆண்டு போட்டிகளில் 17 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக 2010 ஆண்டு டென்னிஸ் இடம்பெற்றுள்ளது 
அடுத்த காமன்வெல்த் போட்டி 2014-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment